சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து 4 இன்ஜினியர்கள் உடல் நசுங்கி பலி: வாழ்க்கை தேடி வந்த வாலிபர்களுக்கு நேர்ந்த சோகம்; டிரைவரும் உயிரிழந்த பரிதாபம்

சென்னை: தனியார் நிறுவன நேர்முகத் தேர்வுக்கு போவதா, நண்பர்கள் ஒன்று சேர்ந்து நிறுவனம் தொடங்குவதா என்ற கனவுடன் வந்த 5 வாலிபர்கள் வந்த கார், சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில், வாழ்க்கை கனவுடன் வந்த 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். கார் ஒன்று இருந்ததற்கான தடயமே இல்லாத வகையில், சுக்குநூறாக நொறுங்கிக் கிடந்தது. சேலம், மேட்டூரை சேர்ந்த ராஜ் ஹரிஷ் (22), திருச்சி அஜய் (22), புதுக்கோட்டை ராகுல் கார்த்திக் (22), சென்னை, விருகம்பாக்கம் அரவிந்த் சங்கர் (22). நண்பர்களான இந்த நால்வரும், சென்னையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளனர்.

இந்நிலையில், ராகுல் கார்த்திக், அஜய் மற்றும் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் வசித்து வரும் அவர்களது நண்பர் காமேஷ் (22) ஆகியோருக்கு இன்று (6ம் தேதி) இன்டர்வியூ நடக்க இருந்தது. இதற்காக, ராகுல் கார்த்திக், அஜய் ஆகியோர் மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளனர். இந்நிலையில், ராஜ்ஹரிஷ், சென்னையில் உள்ள நண்பர்களிடம் வேலைக்கு போகலாமா அல்லது நண்பர்கள் ஒன்று சேர்ந்து தொழில் தொடங்கலாமா என்பது குறித்து ஆலோசனை தனது கடந்த 3ம் தேதி இரவு வந்தார். அவருடன் நண்பர் நவீன் என்பவரும் சென்னை வந்தார். இதனை அறிந்த அரவிந்த் சங்கர் மற்றும் கல்லூரி நண்பர்கள் காரப்பாக்கத்தில் அறை எடுத்து தங்கினர்.

இந்நிலையில், இன்டர்வியூ தேதி மாற்றப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து விட்டு, அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் சென்னை தி.நகரில் உள்ள பப்க்கு நேற்று முன்தினம் இரவு சென்று மது அருந்தினர். அதை, நவீன் மற்றும் புவன் ஆகியோர் தவிர்த்துவிட்டனர். பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு மேல் அனைவரும் பப்பில் இருந்து புறப்பட்டபோது, புவன் மற்றும் காமேஷ் ஆகியோர் பைக்கில் தங்கள் விடுதிக்கு திரும்பிவிட்டனர்.  அப்போது ராஜ் ஹரிஷ், அரவிந்த் சங்கர், அஜய், ராகுல் கார்த்திக் ஆகியோர், வண்டலூர் வரை ஒரு ரவுண்ட் சென்று விட்டு வருவதாக கூறி காரில் சென்றுள்ளனர். சொகுசு காரை நவீன் 140 கி.மீ. வேகத்தில் ஓட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில், கார் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் அருகே நேற்றுமுன்தினம் அதிகாலை 1:48 மணி அளவில், முதலில், காரின் முன்னால் வலதுபுறம் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 200 மீட்டர் தாறுமாறாக சென்று இடதுபுறம் சாலை ஓரம் இரும்பு கம்பிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் லாரி மீது அதிவேகமாக பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில், லாரிக்கு அடியில் சிக்கி சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது. இச்சம்பவம் குறித்து, தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீசார் மற்றும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து ஆய்வு செய்தனர். அப்போது டிரைவர் சீட்டில் ஒருவர், அதன் அருகிலுள்ள மற்றொரு சீட்டில் மூன்று பேர், பின் பக்க சீட்டில் ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் டிரைவர் சீட்டில் இருந்த நவீனின் சடலத்தை மீட்டனர்.

மற்றவர்களின் சடலங்களை, தாம்பரம் தீயணைப்பு படையினர், இரண்டு சிறிய ரக அறுவை எந்திரங்களை வைத்து காரின் பகுதிகளை தனித்தனியாக அறுத்தும், கடப்பாரையால் குத்தி உடைத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி மற்றவர்களின் சடலங்களை மீட்டனர். காரின் இடிபாடுகளில் சிக்கிய ஐந்து பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை. இதைத் ெதாடர்ந்து உடல்களை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: