ஆதிதிராவிடர் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு மயிலாப்பூரை ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்: பேரவையில் த.வேலு எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு (திமுக) பேசியதாவது: மயிலாப்பூர் கோடீஸ்வரர்கள், விஐபிக்கள் மட்டுமே நிறைந்த பகுதி என்று பலர் கருதுகின்றனர். ஆனால், ஏழைகள் தான் இங்கு அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக, மீனவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோர், ஏழை, நடுத்தர மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்த வீடுகள் இல்லாததால், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

அம்பேத்கர் பாலம் அருகே பல ஆண்டுகளாக வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும். ஆனால், அங்கு குறைந்த இடம் உள்ளதால், அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு கட்டித்தர வேண்டும். குடிசை பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கலைஞரின் கைவண்ணத்தில் உருவான தொல்காப்பியர் பூங்காவை புனரமைக்க வேண்டும். காஞ்சிபுரம் எப்படி  பெரிய கோயில் நகரம் என்று சொல்கிறோமோ, அதுபோல இங்கு 100 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வழிபாட்டு தலங்கள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். எனவே, மயிலாப்பூரை ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்.

கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு வாடகையை குறைக்க வேண்டும். கலைஞர் தமிழ்தாய் வாழ்த்து பாடலை, அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் ஒலிக்க செய்தார். ஆனால், தனியார் பள்ளிகளில் இது பின்பற்றப்படவில்லை. எனவே, அனைத்து பள்ளிகளிலும் தமிழ்தாய் வாழ்த்து பாடலை கட்டாயமாக்க வேண்டும். திருவள்ளுவர் சிலை வளாகத்தில் கலைஞருக்கு சிலை அமைக்க வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க இந்த சட்டமன்றம், இன்று சினிமா செட்டிங் போல அமைத்து, அதில் உட்கார்ந்து இருக்கிறோம். இதற்கு எல்லாம் காரணம் யார். இங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும்.

கலைஞர் எதை செய்தாலும் ஒரு தொலைநோக்கு சிந்தனையோடு இருக்கும். அது அவருக்காக உருவாக்கவில்லை. தமிழகத்தை கம்பீரத்தோடு வழிநடத்துபவர்கள் பயன்படுத்துவதற்காக தான் உருவாக்கினார். அங்கு மருத்துவமனை இருக்கிறது என்று யோசிக்க வேண்டாம். நந்தனம் மற்றும்  பட்டினம்பாக்கத்தில் இடம்  இருக்கிறது. அதை கூட மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம். மனசாட்சியுள்ள எவரிடம் இருந்தும் எதிர்ப்பு வராது. எனவே, கலைஞர் நினைவாக அவர் கட்டிய கட்டிடத்தில் சட்டமன்றம் இயங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: