கங்கை சமவெளியில் இருந்த நகர நாகரீகம் வைகை சமவெளியிலும் இருந்துள்ளது கீழடி ஆய்வுகள் மூலம் நிரூபணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: கங்கை சமவெளியில் இருந்த நகர நாகரீகம் வைகை சமவெளியிலும் இருந்தது என்பதை கீழடி ஆய்வுகள் நிரூபித்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசியதாவது: மாம்பலத்தில் இருக்கக்கூடிய தமிழ் கல்வெட்டு பாண்டிய நெடுஞ்செழியன் பெயரை தாங்கி வந்த அந்த கல்வெட்டை கண்டுபிடித்ததற்கு பிறகு தான் தமிழின்  தொன்மை என்பது கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்று நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு பிறகு நடுகல் புலிமான்கோம்பை நடுகல் கல்வெட்டு கண்டுபிடித்ததற்கு பிறகு தான் தமிழின் தொன்மை என்பது கி.மு. 5ம் நூற்றாண்டாக இருக்கும் என்று ஆய்வுலகம் ஏற்றுக் கொண்டது.

கீழடி ஆய்வுகள் வந்தது. கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் நமக்கு கிடைத்திருக்கக்கூடிய பொருட்கள், அந்த பானை ஓடுகளில் இருந்த தமிழ் எழுத்துக்கள், அதன் கரிம ஆய்வுகளை அமெரிக்காவில் இருக்கக்கூடிய பீட்டா ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தான் தமிழின் தொன்மை கி.மு. 6ம் நூற்றாண்டாக வந்தது என்று ஒரு நூற்றாண்டை மேலே செல்வதற்கு நமது கீழடி ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்பட்டது. அது மட்டுமல்ல இந்த தமிழ் சமுதாயம் என்பது கி.மு.6ம் நூற்றாண்டிலே படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற சமுதாயமாக விளங்கி வந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

கங்கை சமவெளியில் இருந்த நகர நாகரிகம், வைகை சமவெளியிலும் இருந்தது என்பதை நிரூபித்த ஆய்வுகள் கீழடி ஆய்வுகள். அதபோல மகாஜன காலத்தில் இருந்த தொழில் வளர்ச்சி வாணிபம் நம்முடைய வைகை சமவெளியிலும் இருந்தது என்பதை நிரூபித்த ஆய்வுகள் கீழடி ஆய்வுகள். இதை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வருவதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அதற்காக தான் முதல்வர் இந்தியாவிலே எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை நடத்துவதற்கு தொல்லியல் வாழ்விடங்களை பாதுகாக்க ரூ.5 கோடியை ஒதுக்கி தந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: