திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் உள்பட 300 கோயில்களில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

* கோயில்கள் சார்பாக 22 திருமண மண்டபங்கள் கட்டப்படும்.

* 40 முதுநிலைத் திருக்கோயில்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் (மாஸ்டர் பிளான்) வகுக்கப்பட்டு ரூ.200 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

* பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பக்தர்களின் அனைத்து தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூ.125 கோடி செலவில்  ஏற்படுத்தப்படும்.

* இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் திருப்பணி மேற்கொள்வதற்காக நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உட்பட 300 கோயில்களில் இருந்து பெறப்பட்ட திருப்பணி முன்மொழிவுகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு குடமுழுக்கிற்கான திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பணிகளுக்குத் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும்.

* காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட இடத்தில் திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வணிக வளாகம் ரூ.100 கோடி  மதிப்பீட்டில் கட்டப்படும்.

Related Stories: