பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு  மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலெக்டர் ராகுல்நாத், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 593 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 1,42,376 மாணவ, மாணவிகள் உள்ளனர்.

பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்கள், பணியாளர்கள், சத்துணவு  அமைப்பாளர்கள் உள்பட அனைவருக்கும்  சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. இதுவரை 95 சதவீத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பயன்படுத்த கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவை தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்து  படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்த கூடாது என்றார்.

Related Stories: