செங்கை அரசு மருத்துவமனையில் விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவு: வரலட்சுமி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் மா.சு. பதில்

சென்னை: செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவு விரைவில் தொடங்கப்படும் என செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி) பேசியதாவது: மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை. மருத்துவர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: மணப்பாறையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அவர் சொன்ன வசதிகள், இன்னமும் கூடுதலான பல்வேறு வசதிகள் அங்கு தேவைப்படுகிறது. ₹50 ேகாடி அளவிலான வசதிகள் அந்த மருத்துவமனைக்கு தேவைப்படுகிறது. முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நிச்சயம் சிறந்த முறையில் மேம்படுத்தி தரப்படும். செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன் (திமுக): செங்கல்பட்டு தொகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் தலை காய சிகிச்சைப் பிரிவு ஒன்றை தொடங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் அதிக விபத்துகள் நடப்பதால், இந்த பிரிவை தொடங்க வேண்டும்.

பழமையான மருத்துவ கல்லூரி மருத்துவமனை நீண்ட காலமாக 100 மருத்துவ பணி இடங்கள் மட்டுமே உள்ளது. அதை 200 இடங்களாக அதிகப்படுத்த வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன்: செங்கல்பட்டு அரசு மாவட்ட மருத்துவமனைக்கு என்எச்எம் நிதியில் இருந்து, காய பிரிவு தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories: