வீடு வாங்குவோருக்காக தவணை முறை திட்டம் அறிமுகம் லாயிட்ஸ் காலனியில் ரூ.451 கோடியில் குடியிருப்பு, வணிக வளாகம்: சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் சு.முத்துசாமி பேசினார். தொடர்ந்து அவர் அறிவித்த அறிவிப்புகள்:

* தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பொதுமக்கள் வாங்கத்தக்க விலையில் வீடுகள் வழங்கிடும் அரசின் முயற்சியை நிறைவேற்றும் பொருட்டு சுயநிதித் திட்டத்தின்கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

* பாடிக்குப்பத்தில் ரூ.62.77 கோடியில் 155 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

* அயனாவரத்தில் ரூ.86.31 கோடியில் 216 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

* அம்பத்தூரில் ரூ.8.87 கோடியில் 151 மனைகளும், ஆவடியில் ரூ.1.74 கோடியில் 45 மனைகளும், சோழிங்கநல்லூரில் ரூ.4.75 கோடியில் 117 மனைகளும் மேம்படுத்தப்படும்.

* லாயிட்ஸ் காலனியில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் ரூ.451 கோடி மதிப்பீட்டில் மறுமேம்பாடு செய்யப்படும்.

* வீட்டு வசதி வாரிய திட்டங்களில் இருந்து உருவாகும் குடியிருப்போர் நலச்சங்கங்களை ஆதரிப்பதற்காக,  அவற்றின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் நிதி வழங்கி ஊக்குவிக்கும். இதற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்ட நிதியின் இருந்து மூலதன நிதி உருவாக்கப்படும்.

* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பொருளாதாரத்தில் நலிவுறுற்ற மற்றும் குறைந்த வருவாய், மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குவோர்களின் பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் வகையில் தவணை முறை திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: