காப்பீடு, வீடு வழங்கும் திட்டத்தில் கலைஞர் பெயர் மாற்றியது ஏன்? காழ்ப்புணர்ச்சி காரணமாக கலைஞர் பெயரை நீக்கியது அதிமுக அரசுதான்: அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை, செப்.1: சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மற்றும் சட்டமுடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது: கலைஞர் ஆட்சி காலத்தில் கலைஞர் காப்பீடு திட்டம் என்பதை காழ்ப்புணர்ச்சியோடு கடந்த ஆட்சியில் முதல்வர் காப்பீடு திட்டம் பெயர் மாற்றினார்கள். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை பசுமை வீடு திட்டம் என்று மாற்றினார்கள். கலைஞர் என்றாலே அவர்களுக்கு அவ்வளவு பற்று உள்ளது. கலைஞர் பெயர் வைத்தவர் என்பதற்காக செம்மொழி பூங்காவில் செடி, துணியினை கொண்டு கல்வெட்டை மறைத்தனர். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திறப்பாளர் விவர கல்வெட்டில் பூச்செடி வைத்து மறைத்தனர். இதுவும் அந்த ஆட்சியில் நடந்தது.

கடற்கரை பூங்காவில் கல்வெட்டில் கலைஞர் பெயரை அகற்றினார்கள். காவல்துறை தலைமை அலுவலகத்தில் நினைவு கட்டிட கல்வெட்டில் கலைஞர் பெயரை அகற்றினார்கள். ராணிமேரி கல்லூரியில் புதிய கட்டிடத்துக்கு வைக்கப்பட்ட கலைஞர் மாளிகை என்ற பெயரை நீக்கியது அவர்கள் தான். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கலைஞர் பெயரை மறைத்தனர். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கலைஞர் தொலைக்காட்சி பெட்டி கொடுக்காமல் 10 ஆண்டு காலத்துக்கு முடக்கி வைத்தனர். கலைஞர் கொடுத்த டிவி என்பதால் கலைஞர் டிவி என்று மக்கள் கூறியதால் அவர்கள் தரவில்லை. நாங்கள் பெயரை எடுக்க வேண்டும் என்று நினைத்தால், ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி இருப்போம். ஆனால், எங்களுக்கு அந்த எண்ணம் இல்லை.

அவர்களுக்கு தான் பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம். திருவள்ளுவர் சிலை வைக்க கன்னியாகுமரியில் எம்ஜிஆர் அடிக்கல் நாட்டினார். அந்த சிலை திறக்கும் போது கூட எம்ஜிஆர் பெயரை போட்டது கலைஞர் தான். அந்த பெருந்தன்மையுள்ள தலைவர் கலைஞர்.  ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு இடம் வாங்கவில்லை. நிதி ஒதுக்கவில்ைல. அதிகாரிகளையும் நியமிக்கவில்லை. அவர்களுக்கு பெயர் வைக்க வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே உள்ளது. 100 ஆண்டுகாலம் பாரம்பரியமிக்க அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி என்றால் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பெயர், புகழ் கிடைக்கும்.  அதுதான் எங்களுக்கு முக்கியம். அதனால் தான் அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: