உபியில் பரவும் மர்ம காய்ச்சல், டெங்கு: 2 நாளில் 40 குழந்தைகள் பலி: யோகி அரசு மறைப்பதாக பாஜ எம்எல்ஏ குற்றச்சாட்டு

பிரோசாபாத்: உத்தரபிரதேசத்தில் கடந்த 2 நாளில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு 40 குழந்தைகள் பலியாகி உள்ளதாகவும், இதை யோகி அரசு மூடி மறைப்பதாக பாஜ எம்எல்ஏ குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாக யோகி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு சுமத்தின. இந்நிலையில், தற்போது டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் கடந்த ஒரு வாரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதை யோகி அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாக சொந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே குற்றம்சாட்டி உள்ளார்.

பிரோசாபாத் தொகுதி பாஜ எம்எல்ஏ மணிஷ் அசிஜா வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘இந்த மாவட்டத்தில் கடந்த வாரத்தில் (ஆகஸ்ட் 22-23) மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர். இன்று (நேற்று) காலை கூட 6 குழந்தைகள் உயிரிழந்ததாக சோக செய்தியை கேட்டேன். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 4 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது,’’ என்று பதிவிட்டுள்ளார். தகவலறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்மந்தப்பட்ட பிரோசாபாத் மாவட்ட மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். எம்எல்ஏவின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: