புளியங்குடி காந்தி மார்க்கெட் கட்டிட பணி இழுத்தடிப்பு: வாழ்வாதாரத்தை இழந்து வியாபாரிகள் தவிப்பு

புளியங்குடி: புளியங்குடியில் பழைய காந்தி காய்கறி மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு மூன்று வருடங்களாகியும் புதிய கடைகள் கட்டப்படாததால் பணம் கொடுத்த வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீர் விடுகின்றனர். புளியங்குடி நகரின் மையப்பகுதியில் மகாத்மா காந்தி தினசரி காய்கறி மார்கெட் அமைந்து இருந்தது. சுமார் அறுபது வருடங்களுக்கும் மேலாக அந்த பகுதியில் மார்க்கெட் இயங்கி வந்தது. அதிக அளவில் காய்கறிகள் இங்கு இருந்து தினமும் கேரளாவிற்கும், வெளி நாடுகளுக்கும் செல்வதுண்டு. இதில் மொத்த காய்கறி கடைகள், சில்லறை கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், நடைபாதை கடைகள் என மொத்தம் 65க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டன. இதன் மூலம் நகராட்சிக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் வருமானம் வந்தது.

லோடு மேன்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், சிறு கடைகாரர்கள் என சுமார் 300 குடும்பங்கள் இதனை நம்பி பிழைத்து வந்தது. ஆண்டு குத்தகை மூலம் வருடத்திற்கு சுமார் 25 லட்சம் வரை நகராட்சிக்கு வருமானம் வந்தது. 2017ம் ஆண்டு அப்போதைய நகராட்சி நிர்வாகம் வியபாரிகளிடம் பேசி கட்டிடத்தை  இடித்து புதிய கட்டிடம், கடைகள் கட்டி தரப்படும் என்று கூறி அதற்காக வியாபாரிகளிடம் ஒரு கடைக்கு தலா மூன்று லட்சம் வீதம் அட்வான்ஸ் தொகை என வாங்கப்பட்டது. பணம் கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை என்று கூறியதால் அனைவரும் மூன்று லட்சம் கொடுத்தனர். கட்டிடம் கட்டி முடிக்கும் வரை வியாபாரிகளுக்காக தற்காலிகமாக ஊருக்கு வெளியே அரசு மருத்துவமனை அருகில் இடம் ஒதுக்கி தரப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்டு 2018ம் ஆண்டு அப்போதைய கலெக்டர், அமைச்சர் முன்னிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நடப்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் நகராட்சி கமிஷனர் மாறியதால் சுற்றுச்சுவர் கட்டியதோடு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் ஆண்டுகள் பல  கடந்தும் அதற்கான நிர்வாக அனுமதி கிடைக்காததால் கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் மழைகாலத்தில் மழை நீர் பெருகி குளம் போல் காட்சி அளிக்கிறது. காய்கறி மார்கெட் ஊரின் நடுப்பகுதியில் இருக்கும்போது அதிக அளவு மக்கள் நடமாட்டம் காணப்படும். இதனால் மார்க்கெட்டை சுற்றியுள்ள அனைத்து கடைகளிலும் அதிக அளவு வியாபாரம் நடைபெறும். தற்போது கடைகள் இல்லாததால் அனைத்து கடைகளிலும் வியாபாரம் இல்லாமல் காணப்படுகிறது. பணம் கொடுத்த வியாபாரிகளில் பாதிக்கும் மேல் சிறு வியாபாரிகள். அவர்கள் மூன்று லட்சத்தை அதிக வட்டிக்கு வாங்கி கொடுத்து உள்ளனர். கடையும் கிடைக்காமல்,போதிய வருமானமும் இல்லாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கவனத்தில் கொண்டு கடைகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது பற்றி பணம் கொடுத்த காய்கறி கடைகாரர் கூறுகையில், ‘நகரின் மையப்பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டை புதிதாக கட்டி அதில் இருப்பவர்களுகே முன்னுரிமை என்ற கூறியதாலே அனைவரும் தலா மூன்று லட்சம் என 65 பேர் பணம் கொடுத்தோம். ஆனால் தற்போது மார்க்கெட் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தவிப்புக்குள்ளாகி உள்ளோம். கடைகள் கட்டப்படாததால் நகராட்சிக்கு வரக்கூடிய நிரந்தர வருமானமும் பாதித்துள்ளது. யாருக்கும் பயன்படாமல் வீணாக நகரின் மையப்பகுதியில் உள்ள நகராட்சி இடத்தில் கடைகளை கட்டி வியாபாரிகளை பாதுகாத்து, நகராட்சியின் வருமானத்தையும் உயர்த்த வகை செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: