அரியலூர் மாவட்டத்தில் வரும் 1ம் தேதி 180 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு-கலெக்டர் ஆய்வு

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் வருகிற 1ம் தேதி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அரசு பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அரியலூர் மாவட்டம், கண்டிராதீத்தம் அரசு துவக்கப்பள்ளி, அரியலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தடை உத்தரவு அமலுக்கு வந்ததையொட்டி, அரசு பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டது.

தற்போது தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, வருகிற செப்டம்பர் 1ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகளும் மற்றும் குழந்தைகள் மையமும் திறக்கப்படவுள்ளன. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 180 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வகுப்பறைகளில் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவியர்கள் முககவசம் அணிந்து, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவும், சமூக இடைவெளியினை கடைபிடித்து, பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று பள்ளிகளுக்க வர வேண்டும்.

மேலும், தெர்மல் கருவி மூலம் உடல் வெப்பநிலையினை பரிசோதிக்கவும், வைட்டமின் மற்றும் துத்தநாகம் மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரியலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வகுப்பறை, கழிவறை வசதி ஆகியவற்றை பார்வையிட்டு, அரியலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தினை உடனடியாக சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கண்டிராதீத்தம் ஊராட்சியில் குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு, ஆய்வு செய்து, தூய்மையாக வளாகத்தை பராமரிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் அரசு தெரிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.ஆய்வின்போது, கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், வட்டாட்சியர் ராஜமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஷீலா, பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: