அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட 4 கும்கிகள் தேவாலா வந்தன

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புக்குள் புகுந்து  அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக நான்கு கும்கி  யானைகள் அழைத்து வரப்பட்டன. நீலகிரி மாவட்டம் பந்தலூர்,தேவாலா வனச்சரகத்திற்குட்பட்ட நாடுகாணி, பொன்வயல்,கைதகொல்லி, தேவாலா அட்டி,வாழவயல்,கோட்டவயல், பில்லுக்கடை,பாண்டியார் அரசு தேயிலைத்தோட்டம், கரியசோலை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் புகுந்து குடியிருப்புகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த சில நாட்களுக்கு முன் தேவாலா பஜாரில் அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அதன்பின் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்டுவதற்கு மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் நடவடிக்கையின் பேரில் முதுமலையில் இருந்து விஜய்,சுஜய்,சீனிவாசன்,பொம்மன் ஆகிய 4 கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவாலா ரேஞ்சர் பிரசாத் தலைமையில் 22 பேர் கொண்ட குழுவினர் நாடுகாணி மரபியல் பூங்கா பகுதியில் நேற்று குடியிருப்புக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் காட்டுயானையை கும்கிகள் உதவியுடன் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ரேஞ்சர் கூறுகையில்: குடியிருப்புக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானையோடு இரண்டு யானைகள் சேர்ந்து இருப்பதை பார்த்துள்ளோம். மற்ற யானைகளிடமிருந்து தனிமைப்படுத்தி அந்த யானையை விரைவில் அடர்ந்த  வனத்துக்குள் விரட்டப்படும் என்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாண்டியார் அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ சரகம் 4 தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை ஒன்று மூர்த்தி என்பவரது வீட்டின்  ஜன்னலை உடைத்து சேதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: