திராவிட மொழிகளில் சிறந்த நூல்கள் தமிழுக்கு மொழி பெயர்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம், மல்யுத்தம் பயிற்சி: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை: பள்ளி கல்வி துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு:

* திராவிட மொழிகளிலேயே தொன்மை மிக்க மொழியான தமிழின் வரலாறு, பண்பாட்டு மரபு மற்றும் தமிழ் சமூகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் நூல்கள்(மாபெரும் தமிழ் கனவு ஆங்கிலத்திலும், பொன்னியின் செல்வன், வைக்கம் போராட்டம் ஆகிய நூல்கள் மலையாளத்திலும், திருக்குறளுக்கான கலைஞர் உரை தெலுங்கிலும், தி.ஜானகிராமனின் சிறுகதைகள் கன்னடத்திலும்) மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில மொழி பதிப்பகங்களோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கூட்டு கூட்டு வெளியீடுகளாக கொண்டுவரப்படும். இதே போல் பிற திராவிட மொழிகளில் இருந்து சிறந்த நூல்கள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்படும்.

* உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், பொறியியல், வேதியியல், வேளாண்மை போன்ற துறைகளில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ள தலைசிறந்த நூல்களை தமிழில் மொழி பெயர்த்து சம்பந்தப்பட்ட பதிப்பகங்களோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கூட்டு வெளியீடாக ரூ.2 கோடி செலவில் வெளியிடப்படும்.

*குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும்(பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஓவியம் தீட்டுதல் ஆற்றுதல்) நன்னெறி கல்வியை கற்பிக்கவும் மற்றும் அறம் சார் சமூக விழுமியங்களை வளர்த்தெடுக்கவும் இளந்தளிர் இலக்கிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளளர்களை தேர்வு செய்து ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும்.

* தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களை போற்றும் வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாக கொள்ளும் வகையிலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.40 லட்சத்தில் ”செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்படும்.

* கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பன்னிசை, நாட்டுப்புறப்பாட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்களை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் எடுத்து செல்லவதை இலக்காக கொண்டு கிராமப்புறங்களில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படும். இதே போல சிலம்பம், மல்யுத்தம் முதலான தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளையும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முறையாக கொண்டு சேர்க்க உரிய பயிற்சி வழங்கப்படும்.

* பள்ளி ஒன்றுக்கு ரூ.5000 வீதம் 24266 அரசு தொடக்க பள்ளிகளுக்கும், ரூ.10,000 வீதம் 6948 அரசு நடுநிலை பள்ளிகளுக்கும், 25,000 வீதம் 6177 அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் ரூ.35 ேகாடியில் ெகாள்முதல் செய்து வழங்கப்படும்.

* அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அனைத்து துறைகளிலும் வெளிவந்துள்ள தலைசிறந்த புத்தகங்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும். மின்புத்தகங்கள், மின்-பருவ இதழ்கள், மின் ஆராய்ச்சி இதழ்களை வாசகர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இணையவழி குறிப்புதவி பிரிவு ரூ.6.5 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* இந்திய நூலகத்தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் ரூ.1.37 கோடியில் மாதிரி நூலகம் அமைக்கப்படும்.

* செந்நாப்புலவர் ஆ.கார்மேகனார் பெயரில் புதிய நூலக கட்டிடம் கட்டப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: