உயர் கல்வி 51.4%, இந்தியாவில் 27.1% தான் தமிழகத்தில் உள்ள கல்வி கொள்கையை இந்தியா முழுவதும் செயல்படுத்துங்கள்: விடுதலை சிறுத்தை எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை:தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நாகப்பட்டினம் முகமது ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தை) பேசியதாவது: தமிழகத்தில் கல்வி கொள்கையை எப்படி வடிவமைக்க வேண்டும், எந்த திசையை நோக்கி  பயணிக்க வேண்டும் என்று தற்போதைய அமைச்சர்களுக்கு தெளிவாக தெரியும். நாம் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம். மாநிலத்திற்கு என்று ஒரு கல்வி கொள்கை வடிவமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் என்ன நடந்தது என்பது நமக்கு தெரியும். சேலம் பெரியார் பல்கலைக்கழகம் என்று பெரியார் பெயரில் இருக்கிறது.

பல பல்கலைக்கழகங்களில் பாட திட்டங்களில் சமூகநீதிக்கு எதிராக கருத்துகள் புகுத்தப்பட்டிருக்கிறது. உயர் கல்வி சதவீதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 51.4 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவில் இது 27.1 சதவீதம் தான் உள்ளது. 27.1 சதவீதம் வைத்திருப்பவர்கள் ஒரு கல்வி கொள்கையை வடிவமைத்து 51.4 சதவீதம் உள்ளவர்களுக்கு தந்து, இதை பின்பற்றுங்கள் என்பார்களாம். நாங்கள் சொல்கிறோம், 51 சதவீதத்தை தாண்டி விட்டோம். நாங்கள் வடிவமைத்து தரும் கல்வி கொள்கையை இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் கொடுங்கள். எல்லாருக்கும் கல்வி போய் சேர வேண்டும் என்பதற்காக பாடத்திட்டங்களில் கல்வி முறையில் தமிழ்நாடு கடைபிடிக்கும் கொள்கைதான் என்பதை இந்தியா எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் புதிய கல்வி கொள்கையை தமிழகம் உறுதியாக நிராகரிக்க வேண்டும்.

உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி: பாடப்புத்தகங்களில் பல்வேறு தவறான கருத்துகள் திராவிட இயக்கத்திற்கு எதிர்ப்பான கொள்கைகள் அனுமதிக்கப்பட்டன. திறந்த நிலை பல்கலைக்கழக புத்தகங்களில் அது இருந்தன. அவைகள் எடுக்கப்பட்டு விட்டன. ஷாநவாஸ்: தொண்டு நிறுவனங்கள் கல்வி பணியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி: தொண்டு நிறுவனங்களை எந்த ஒரு காரணத்தை கொண்டும் தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: