திருவண்ணாமலை அரசு கலை கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று பள்ளி மற்றும் உயர் கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கலசப்பாக்கம் உறுப்பினர் சரவணன் (திமுக) பேசுகையில், ‘‘எனது கலசப்பாக்கம் தொகுதியில் ஜவ்வாது மலைப்பகுதி வருகிறது. இதுபோன்ற மலைப் பகுதியில் உள்ள பிரதேசங்களுக்கு பள்ளிகளுக்கு பல ஆசிரியர்கள் வருவதே இல்லை. தூரம் அதிகமாக உள்ளது அதிகாரிகளும் ஆய்வு செய்வதே இல்லை. அதிக மக்கள் வாழும் மலைப்பகுதிகளுக்கு ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்தால் அங்கு கல்வி வளர்ச்சி கூடும். அடிக்கடி பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினால் மட்டுமே மலைப்பகுதிகளில் இருக்கும் மாணவர்களின் படிப்பு தரம் உயரும்.  

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி 1967ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி என பெயர் சூட்டப்பட்டது. இப்போது அந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது. அந்த கல்லூரிக்கு மீண்டும் கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும்’’ என்றார். அமைச்சர் பொன்முடி: திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி பெயர் மாற்றம் குறித்து உறுப்பினர் குறிப்பிட்டார். அப்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு உயிரோடு இருக்கும் ஒருவரது பெயரை எந்த அரசு நிறுவனத்திற்கும் வைக்கக்கூடாது என்ற உத்தரவால் அவரது பெயர் எடுக்கப்பட்டது. இப்போது, கலைஞர், எல்லோருடைய உள்ளங்களிலும் நிரம்பி இருக்கிற காரணத்தால் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு முதல்வரின் அனுமதியோடு கலைஞர் அரசு கலைக் கல்லூரி என்று பெயர் சூட்டப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: