ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியவர் கைது

சென்னை: துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அந்த விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவரது ஆவணங்களை பரிசோதித்தபோது, அவர் ஏமன் நாட்டுக்கு சென்று விட்டு துபாய் வழியாக சென்னைக்கு வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு வேலைக்காக சென்றதாகவும், அந்த நிறுவனம், பணி நிமித்தமாக ஏமன் நாட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.  ஏமன் நாட்டில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதால், அந்த நாட்டுக்கு செல்ல ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது. எனவே, அதை மீறி சென்றதால் சுப்பிரமணியனை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: