2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என உறுதி !

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். மேலும், 2021 - 22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9,924 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. தமது ஆட்சி பொறுப்பேற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி, தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மேலும், புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். புதுச்சேரியில் புதிதாக உழவர் சந்தைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும். புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் வழங்கப்படும். ஆடுகள் வாங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். கறவை மாடுகளை பராமரிக்கவும், கூட்டுறவு சங்கங்களில் இல்லாதவர்களுக்கு 75% மானியத்தில் தீவனம் தரப்படும்

இதனையடுத்து, புதுச்சேரியில் கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும் கல்வி கற்கவும் தேவையான உதவிகளை அரசு வழங்கும். புதுச்சேரியில் ரூ.795.88 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை கட்டப்படும். அனைத்து கோயில்களின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய ஏற்றுமதிக் கொள்கையும் உருவாக்கப்படும்.

மீனவர்களுக்கான டீசல் மானியம், மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும். கடலில் மீன்பிடிக்கும் போது மீனவர்கள் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகு பராமரிப்பு உதவித் தொகை ரூ.20,000ல் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அவர் பேசியுள்ளார்.

Related Stories: