சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில் ரூ.524 கோடி மேம்பாட்டு நிதி: முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது ஒப்புதல் கடிதம்..!

சென்னை: சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் தொகுதிகளை மேம்படுத்த ரூபாய் 524 கோடி நிதி உதவிக்கான ஒப்புதல் கடிதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களிடம் வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று ஒன்றிய அரசின் நிதித் துறையின் கீழ் இயங்கும் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. சிவசுப்பிரமணியன் ராமன் அவர்கள், சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் தொகுதி மேம்பாட்டு நிதி என்னும் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பகுதிகளை மேம்படுத்த ரூபாய் 524 கோடி நிதி உதவிக்கான கொள்கை அளவிலான ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்.

முதற்கட்டமாக இந்நிதி வழங்கப்படுகிறது என்றும், திட்டங்கள் நிறைவேற்றியவுடன் கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார். இந்த தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஓசூரிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க 20 திட்டம், ஒரகடத்தில் மருத்துவ உபகரணங்கள் தொழில் பூங்கா, பெருந்துறை. அம்பத்தூர், கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியில் தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்கள் இந்நிதியின் மூலம் செயல்படுத்தப்படும்.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு ஊரக தொழிற் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழில்துறை முதன்மைச் செயலாளர் திரு. நா.முருகானந்தம், இ..ஆ.ப., குறு, சிறு  மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் திரு.வி.அருண்ராய், இ.ஆ.ப., சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர்கள் திருமதி சித்ரா கே. அலை மற்றும் டாக்டர் ஆர்.கே. சிங், சென்னை மண்டல பொது மேலாளர் திரு.ஏ.எல்.  ரவீந்திரன், திட்ட மேலாண்மை அலகு திரு.பி. ஹரிஹரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: