ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் நீலாங்கரையில் நவீன மின் மாற்றி: உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகர் பகுதிக்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தில் சீரான மின்சாரம் வழங்கவும், புயல் மழை போன்ற பேரிடர் காலங்களில், அதிகம் பாதிக்கப்படும் அடையாறு கோட்டத்திற்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் முதல் உத்தண்டி  வரை உள்ள உயர மின்னழுத்த கம்பிகளை புதை வழித்தடமாக மாற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து, 400 கோடி செலவில், கடந்த ஒரு மாத காலமாக போர்க்கால அடிப்படையில் சுமார் 188.313 கிலோ மீட்டர் மின்னழுத்த கம்பிகளை மின் புதை வழித்தடமாக மாற்றி அதை சார்ந்த வளைய சுற்று தர அமைப்பு மற்றும் புதிய மின் மாற்றி அதை சார்ந்த 600 மின் கட்டமைப்புகளை  வளைய சுற்று தர அமைப்பாக மாற்றியும் 1500க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மின் பெட்டிகளாகவும் மாற்றி அமைக்கப்பட்டது.

முதல் கட்டமாக, நீலாங்கரையில் 15 கிலோ மீட்டர்  வளைய சுற்று தர அமைப்பாகவும், 70 மின் பெட்டிகள் அமைக்கும் பணிகள் ரூ.3.5 கோடி மதிப்பீட்டிலும் முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மின் வாரியதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினர். மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில்,  திமுக இளைஞரணி  செயலாளரும், திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு வளைய சுற்று தர அமைப்பு மற்றும் புதிய மின் மாற்றியை தொடங்கி வைத்தார்.

விழாவில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மின் பகிர்மான இயக்குனர் சிவலிங்க ராஜன் மின்துறை உயர் அதிகாரிகள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, நீலாங்கரையில் உள்ள சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவச்சிலையை, உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, ஆயிரம் பேருக்கு, அரிசி, மூக்கு கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: