பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட 3 கி.மீ சாலை பணியால் மக்கள் அவதி-பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பாணாவரம் : பாணாவரம் அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்காவிட்டால்,  மறியலில் ஈடுபட போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

பாணாவரத்தில் இருந்து சேந்தமங்கலம் வரை செல்லும் பிரதான சாலையில், வெளிதாங்கிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை செல்லும் இணைப்புச் சாலை உள்ளது. இதில் வெளிதாங்கிபுரம் மேட்டு காலனி வரை சுமார்  3 கிலோ மீட்டர் தொலைவிற்கு, சாலை முற்றிலும் பழுதடைந்து இருந்ததால், பிரதம மந்திரி கிராம சாலை  திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் பணிகள் தொடங்கியதில், முதற்கட்டமாக ஜேசிபி இயந்திரம் மூலம் தார் சாலை முழுவதும் கிலரிவிடப்பட்டு தோண்டப்பட்டது. இதனால் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு, ஜல்லி கற்கள் மேலே பெயர்ந்து உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதன்காரணமாக மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாததால், பெண்கள், முதியோர், குழந்தைகள்,  கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், வாகனங்கள் சாலையில் செல்லும்போது ஜல்லி கற்கள் 2 பக்கமும் தெறிப்பதால் நடந்து செல்வோருக்கு காயம் ஏற்பட்டுவதும், வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே கடந்த 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்காவிட்டால், மறியலில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

Related Stories: