ஊராட்சி செயலரை மாற்றக்கோரி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பொதுமக்கள் சாலை மறியல்-அதிகாரிகள் சமரசம்

ஜோலார்பேட்டை :  ஜோலார்பேட்டை அருகே ஊராட்சி செயலரை மாற்றக்கோரி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருட்செல்வி(45). இவர் சின்னகம்மியம்பட்டு ஊராட்சியில் 25 வருடங்களுக்கும் மேலாக அதே பகுதியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஜோலார்பேட்டை பிடிஓ சங்கர் (கி.ஊ) ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி செயலாளர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிமாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி பகுதிக்கு சென்று பணி பொறுப்பை எடுத்துக் கொள்ளாமல் அதே ஊராட்சியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் சின்னகம்மியம்பட்டு ஊராட்சியில் இருந்து பெரியகம்மியம்பட்டு ஊராட்சிக்கு அருட்செல்வி பணிமாற்றம் செய்யப்பட்டார். அவ்வாறு பணிமாற்றம் செய்யப்பட்டும், அருட்செல்வி, தனது கணவருக்கு விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பதால், அவரை காரணம் காட்டி இதுவரை பணிமாறுதல் செய்யாமல் சின்னகம்மியம்பட்டு ஊராட்சியிலேயே பணிபுரிந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் இவர் முறையாக ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யாமலும், எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாமலும், ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறாராம். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஊராட்சி செயலரை மாற்றக்கோரி ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு அலுவலகம் முன்பு உள்ள சின்னகம்மியம்பட்டு- திருப்பத்தூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து துணை பிடிஓ ராஜேந்திரன், எழுத்து மூலம் மனுவாக எழுதி கையெழுத்திட்டு கொடுத்தால், அதிகாரிகள் இடத்தில் சமர்ப்பித்து பிறகு நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையேற்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், மறியலை கைவிட்டு பிடிஓவிடம் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: