ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றம்: பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை..!

டெல்லி: ஆப்கானிஸ்தான் விவகாரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசினர். இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து 45 நிமிடங்களுக்கும் மேல் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

அங்குள்ளவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அங்கு, பெண்கள், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்திருந்தனர். ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ள தங்கள் நாட்டவரை மீட்க, உலக நாடுகள் விமானங்களை அனுப்பி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, இந்தியாவும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஆப்கன் விவகாரம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கொரோனா பேரிடருக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில், இரு நாடுகளும் கலந்தோசிக்க முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Related Stories: