கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே ரயில்வே கிராசிங் சாலை சீரமைப்பு -பொதுமக்கள் மகிழ்ச்சி

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே குண்டும் குழியுமாக இருந்த ரயில்வே கிராசிங் சாலை தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.வேலூர்- திருவண்ணாமலை சாலையில் கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே ரயில்வே கிராசிங் சாலை அமைந்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையில்தான் செல்ல வேண்டும். மேலும், தினசரி இரு சக்கர வாகனங்கள், சரக்கு மற்றும் போக்குவரத்து வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன.

இந்நிலையில் இந்த ரயில்வே கிராசிங்கில் மட்டும் பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக அதிக அளவில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஒட்டிகள் இந்த இடத்தை கடக்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். மேகும், இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள், பள்ளத்தில் இறங்கும்போது நிலைதடுமாறி பின்னால் அமர்ந்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகினர். இதுகுறித்த செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து, குண்டும் குழியுமாக இருந்த சாலையை தார் ஜல்லி கொண்டு சீரமைத்தனர். இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Related Stories: