பொதுமக்கள் பார்வைக்கு திறந்த முதல்நாளிலேயே மெரினா கடலில் குளித்த 3 மாணவர்கள் மாயம்: ராட்சத அலையில் சிக்கினர்; தீயணைப்பு வீரர்கள் தேடுதல் தீவிரம்

சென்னை: கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நேற்று தான் மெரினா கடற்கரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது. இதனால் நேற்று அதிகாலை முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் நண்பர்களுடன் குவிந்தனர். கடற்கரைக்கு வந்தவர்களில் சிலர் உற்சாக மிகுதியில் போலீசாரின் தடையை மீறி மதியம் 2 மணிக்கு கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். அப்போது பள்ளி மாணவர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென ராட்சத அலை எழும்பியது. அதில் எதிர்பாராத விதமாக மாணவர்களில் 3 பேர் அலையில் சிக்கினர்.

இதை பார்த்ததும் அருகில் குளித்துக்கொண்டிருந்த நண்பர்கள் மூவர் உதவி கேட்டு அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அலையில் சிக்கிய 3 மாணவர்களை மீட்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் மூவரும் அலையில் மாயமாகினர். தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாயமான 3 மாணவர்களை மீனவர்கள் உதவியுடன் படகு மூலம் தேடினர். வெகு நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மாயமான மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், பல்லாவரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் விமல் (17), ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் சபரிநாதன் (17), தர்மராஜன் (17) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் தனது நண்பர்களான கல்லறை தோட்டத்தை சேர்ந்த சல்மான் (17), ஆலப்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் (17), கிண்டியை சேர்ந்த ஆகாஷ் (17) ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். இவர்கள் 6 பேரும் டாக்டர் பி.வி.ராவ் உயர் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மாயமான 3 பள்ளி மாணவர்களை கடலோர பாதுகாப்பு குழுமம், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினாவில் பரபரப்பு ஏற்பட்டது.   

Related Stories: