மேல் செம்பேடு - வெள்ளியூர் பகுதி கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.45 கோடி மதிப்பில் தடுப்பணை: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தகவல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மேல் செம்பேடு மற்றும் வெள்ளியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச்சுற்றி மேல் செம்பேடு, காதர்வேடு, மெய்யூர், சித்தம்பாக்கம், விளாப்பாக்கம், எறையூர், வெள்ளியூர் என 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் பெரும்பாலும் விவசாயிகள் அதிக அளவு உள்ளனர். இந்த கிராமங்களின் நடுவில் கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 1998ம் ஆண்டு மேல் செம்பேடு - விளாப்பாக்கம் இடையேயும், வெள்ளியூர் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 1980ம் ஆண்டு தடுப்பணையும் கட்டப்பட்டது.

இந்த தடுப்பணையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுற்று வட்டார 40 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து பயனடைந்து வந்தனர். கட்டி முடிக்கப்பட்டு சில  வருடத்திலேயே மழையால் கொசஸ்தலை ஆற்றில் 2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த தடுப்பணை உடைந்து சேதமடைந்தது. இதை சீரமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர், பொதுப்பனித்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் மனு கொடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பூந்தமல்லி தொகுதி திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி நேற்று சேதமடைந்த செம்பேடு, வெள்ளியூர் தடுப்பணைகளை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறும்போது, `கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்ட ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மேல் செம்பேடு மற்றும் வெள்ளியூர் பகுதி கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று 2 புதிய தடுப்பணைகள் கட்ட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அணை கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். இதில் மேல் செம்பேடு பகுதியில் ரூ.20 கோடி செலவிலும், வெள்ளியூர் பகுதியில் ரூ.25 கோடி செலவிலும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

இந்த தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைத்தால் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 40 கிராமங்கள் நிலத்தடிநீர் செரிவூட்டுதல் ஏற்படும்,’ இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் எல்லாபுரம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, மாவட்ட ஒன்றிய திமுக நிர்வாகிகள் வி.ஜெ.சீனிவாசன், பி.ஜி.முனுசாமி, ஜி.பாஸ்கர், எம்.குமார்,  பாஸ்கர், நாகலிங்கம், ரகு, கஜா, சரத்குமார் ஊராட்சி தலைவர் சம்பத், சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: