திருவூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்: பேரவையில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வேண்டுகோள்

திருவள்ளூர்: தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை மானிய கூட்டத்தொடரில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்து பேசியதாவது: தமிழ்நாட்டில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனது பூந்தமல்லி மிகவும் பின்தங்கிய தொகுதி. எனது தொகுதியில் அரசு கல்லூரிகள் எதுவும் இல்லை. தனியார் கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே எனது பூந்தமல்லி தொகுதியில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும்.

திருவூரில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விவசாயம் அதிகம் செய்யப்படுகிறது. எனவே எங்களது விவசாய பூமியான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் புதியதாக அரசு வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாதிரி பள்ளிகளை கட்டித் தர வேண்டும்.

மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட வேண்டும். ஐஐடி, பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகள் அதிக அளவில் தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: