2 பேர் கைது, லோடு வேன், 7 பைக்குகள் சிக்கின தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 2.10 டன் மஞ்சள் பறிமுதல்: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த  2.10 டன் மஞ்சளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேன், 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது கடல் வழியாக விரலி மஞ்சள், பீடி இலை, கஞ்சா போன்றவை கடத்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, எஸ்ஐக்கள் ஜீவமணி, வேல்ராஜ், வில்லியம் பெஞ்சமின், ஏட்டு இருதய ராஜ்குமார் மற்றும் போலீசார் காயல்பட்டணம் கடற்கரையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஓடக்கரை பகுதியில் வந்த லோடு வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

போலீசாரைக் கண்டதும் வேனின் பின்னால் பாதுகாப்பாக பைக்குகளில் வந்த 7 பேர் பைக்கை போட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.வேனில் சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தலா 30 கிலோ வீதம் 70 மூடைகளில் 2.10 டன் விரலி மஞ்சள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லோடு வேனில் வந்த நெல்லை கரையிருப்பு ரைஸ் மில் தெருவைச் சேர்ந்த உடையார் மகன் இசக்கிபாண்டி (38), தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த வைரவன் மகன் ராம்குமார் (28) இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த மஞ்சள் மூடைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. பைக்கில் தப்பியோடிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மஞ்சள் கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேன் மற்றும் 7 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெற்கு பகுதியிலும் பாதுகாப்பு கூடுமா?

 தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு கடற்கரை பகுதிகளில் போலீசார், மரைன் போலீசார், கியூ பிரிவினர், சுங்கத்துறையினர் என பலரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் மஞ்சள் கடத்தல் கும்பல், கண்காணிப்பு குறைவாக உள்ள மாவட்டத்தின் தெற்கு பகுதி கடற்கரைகளை கடத்தல் வேலைகளுக்கு பயன்படுத்த துவங்கியுள்ளன. இதனால் இங்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: