ஆண்டிபட்டியில் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதிகளில் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை  பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, கடைவீதி, வைகை அணை சாலை, பாலக்கோம்பை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு மளிகை, இறைச்சி, காய்கறி, பழங்கள், பூக்கடை என மொத்த மற்றும் சில்லரை விற்படை கடைகள் உள்ளன. இவற்றில் நேற்று காரில் வந்த நபர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்தார்.

 

இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிபட்டி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான  பணியாளர்கள் அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் கன்னியப்பபிள்ளைபட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பதும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததற்காக அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலும், அதனை வாங்கி பயன்படுத்தி வந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: