பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்: சிபிசிஐடி தகவல்

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 10 நாளில் சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில், அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், தலைமறைவான சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீஸார் ஜூன் 16-ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏற்கெனவே அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள், பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவின் இரு ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்தநிலையில் தற்போது 10 நாளில் சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே முதல் போக்சோ வழக்கில் கடந்த 13-ம் தேதி 300 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி. 2-வது மற்றும் 3-வது போக்சோ வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், 2 போக்சோ வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கையை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: