புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை: நம் முன்னோர் நோய் எதிர்ப்புத் திறன் மிக்க, வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி வளரக் கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு நோயில்லா வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆனால், அவை யாவும் காலப்போக்கில் அழிந்துபட்டன. இவற்றை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.தற்போது உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புவிவெப்பமயமாதலைக் குறைப்பதில் பாரம்பரிய நெல் ரகங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. நோயில்லா வாழ்வு வாழ நாம் மீண்டும் பாரம்பரிய நெல் உற்பத்திக்குத் திரும்ப வேண்டும். இது மண்வளம், பூச்சிவளம், நீர்வளம், நம் உடல்வளம் ஆகியவற்றைக் காக்கவும், கால்நடைகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் வல்லது. இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும், குழந்தைகள் சத்துக்குறைபாட்டைக் குறைப்பதற்கு மிகச் சிறந்த மாற்று நம் பாரம்பரிய நெல் ரகங்களே.

பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்பியல்புகள்: பாரம்பரிய நெல் ரகங்கள் வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய தன்மையுடையவை. இவற்றில் பெரும்பாலானவை பூச்சி, நோய் எதிர்ப்புத் திறன் கொண்டவை. இவற்றைப் பயிரிடுவதற்கான இடுபொருள் செலவு மிகமிகக் குறைவு. மனிதன், மண், கால்நடை, பயிர் ஆகிய அனைத்திற்கும் உகந்தவை. சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானவை. நேரடி விதைப்பிற்கும் நடவிற்கும் ஏற்றவை. பாரம்பரிய ரகங்களில் காட்டுயாணம், மடாமுழுங்கி, மாப்பிள்ளைச் சம்பா போன்றவை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வளரக்கூடிய ரகங்களாகும்.நெல் அரவையினின்று 75 சதவீதம் வரை அரிசி கிடைக்கும். பாரம்பரிய நெல் இரகங்களின் அரிசியில் செய்யக்கூடிய உணவுகள் எளிதில் செரிக்கக் கூடியவை. மலச்சிக்கலை நீக்குதல், நரம்புகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

பாரம்பரியநெல் இரகங்களிலுள்ளமருத்துவக் குணங்கள்: கருங்குறுவை இரண குட்டத்தையும், சிற்சில நஞ்சுகளையும் நீக்கும். பாலுணர்வை வலுப்படுத்தும் குணம் கொண்டதால் இது இந்தியன் வயாகரா என்று அழைக்கப்படுகிறது. கருத்தக்கார் அரிசி வெண்குட்டத்தைப் போக்கும் காடி தயாரிக்கவும், பாதரசத்தை முறித்துப் புற்றுநோய் மருந்து செய்வதற்கும் பயன்படுவதுடன், தீராதநோய்கள் பலவற்றைத் தீர்க்கவும் வல்லது.தூயமல்லி பிரியாணி செய்வதற்கு ஏற்றது. குளவாழை நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், செரிமானத்தை ஊக்குவிப்பதற்கும், வயிற்றுக் கோளாறுகளை நீக்குவதற்கும் ஏற்றது. பூங்கார் அரிசியில் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி செய்து கொடுப்பது மரபாகும். சுயப்பிரசவத்திற்கும் வழிவகுக்கிறது. இதில் துத்தநாகச் சத்து மிகுதி.மாப்பிள்ளைச் சம்பா நீராகாரத்தினை அருந்தும் புதுமாப்பிள்ளை இளவட்டக் கல்லை எளிதாகத் தூக்குவார் என்கிற சொல்லாடல் உண்டு. நரம்புகளை வலுப்படுத்தி ஆண்மையை அதிகரிக்கும். கருடன் சம்பா இரகம் காடைக்கழுத்தன் எனவும் வழங்கப்பெறும். இது சோற்றுக்கும், பிட்டு செய்வதற்கும் ஏற்ற இரகமாகும்.

சிவப்புக் கவுனி இதயத்தையும், பற்கள், ஈறுகளையும் வலுப்படுத்தும். இரத்தஓட்டத்தைச் சீர்படுத்துவதோடு மூட்டுவலியையும் போக்கும். கருப்புக் கவுனி அரிசிசோழர் காலத்திலிருந்தே உள்ளதாகும். தமிழ் மன்னர்கள் விரும்பி உண்டனர். இந்த அரிசி புற்றுநோய் எதிர்ப்பையும், இன்சுலின் சுரப்பையும் மேம்படுத்துகிறது. நச்சுக்கழிவுகளை உடலினின்று வெளியேற்றும். இதில் நார்ச்சத்தும் 18 வகை அமினோ அமிலங்களும் உள்ளன.அறுபதாம் குறுவை உடல் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, நல்லகொழுப்பைக் கூட்டுகிறது. குழியடிச்சான் ரகம் பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்குவகிக்கிறது. குள்ளக்கார் அரிசி உடற்பருமனைக் குறைக்கிறது. இது அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை அரிசியைவிடத் துத்தநாகம், இரும்பு போன்ற சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது.

பொதுவாகப் பாரம்பரிய நெல் இரக அரிசி உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு நிறமும், மணமும் மரபுவழி நன்மைகளும் கொண்டவை. இவற்றைப் பயிர் செய்ய அதிக உரமோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை. விவசாயிகளும் இதுபோன்ற இரகங்களைச் சாகுபடி செய்தால் மக்களிடையேயும் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதோடு, அடுத்ததலைமுறைக்கும் இவற்றைக் கொண்டு செல்ல முடியும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Related Stories: