இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு தலிபான்களை பாராட்டிய சமாஜ்வாதி எம்பி மீது வழக்கு: உத்தரபிரதேச போலீஸ் நடவடிக்கை

சம்பல்: தலிபான் போராளிகளை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசிய எம்பி ஷபிகுர் ரஹ்மான் பர்க் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஷபிகுர் ரஹ்மான் பர்க், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது குறித்து சர்ச்சை கருத்தை கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில், ஆங்கிலேயர்கள் ஆட்சி இருந்த போது, அவர்களுக்கு எதிராக போராடினோம்.

தற்போது தலிபான்கள் தங்களது (ஆப்கானிஸ்தான்) நாட்டை விடுவிக்க போராடி வென்றுள்ளனர். ரஷ்யா, அமெரிக்கா போன்ற சக்திவாய்ந்த நாடுகளை தங்களது நாட்டில் இருந்து வெளியேற்றி உள்ளனர்’ என்று தெரிவித்திருந்தார். இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறியதையும், தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதையும் ஒப்பிட்டு பேசியதால், அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதுதொடர்பாக சம்பல் போலீசார் விசாரணை நடத்தி எம்பி ஷபிகுர் ரஹ்மான் பர்க் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தலிபான்களை ஆதரித்ததற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சம்பல் போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘தலிபான் போராளிகளை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசிய ஷபிகுர் ரஹ்மான் பர்க் உள்ளிட்டோர் மீது ஐபிசி 153 ஏ, 124 ஏ மற்றும் 295 ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: