ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறுவதில் உறுதி: அதிபர் பைடன் விளக்கம்

வாஷிங்டன்: ``ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறுவதில் உறுதியாக இருந்தேன்,’’ என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார். ஆப்கன் விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பைடன் கூறியதாவது: அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா அமைப்பை அழிக்கவும், ஒசாமா பின்லேடனைப் பிடிக்கவும் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் சென்றது. அந்நாட்டை கட்டமைப்பதற்காக அல்ல. அமெரிக்க ராணுவம் வெளியேறுவதற்கு இதை விட சரியான தருணம் இருந்திருக்க முடியாது. ஆப்கன் ராணுவத்தினர் போராடாமலேயே சரணடைந்து விட்டனர்.

தங்கள் நாட்டை பாதுகாக்க ஆப்கன் அரசும், ராணுவமும் எதிர்த்து போரிடாத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு கிடையாது. அமெரிக்க வீரர்களை போரில் இழப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?  ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருந்தேன். பின் வாங்கவில்லை. அதனால் என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியும். ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்ததை விட தலிபான்கள் வேகமாக ஆப்கனை கைப்பற்றி விட்டனர்.  காபூலில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கன் மக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: