ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு அதிகளவில் கொண்டு வருவேன்: இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

திருப்பூர்: ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு அதிகளவு கொண்டு வருவேன் என திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார். மக்கள் ஆசி யாத்திரை நடத்தி வரும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு திருப்பூரில் நேற்று பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து குமரன் நினைகவம் பகுதியில் மேடை நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் ஒன்றிய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜவினர் பொதுமக்கள் ஆதரவோடு 4 பேர் சட்டமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

வரலாற்றில் பட்டியலினத்தை சேர்ந்தவரை பாஜக அமைச்சராக்கியது முதல் பெருமை. எனது தாய், தந்தை இருவரும் தற்போதும் விவசாயம் செய்து வருகிறார்கள். எனது தாத்தா செருப்பு தைக்கும் தொழிலாளி. ஆனால் நான் மத்திய இணை அமைச்சர். இந்த பெருமையை எனக்கு கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழகத்திற்கு மத்திய அரசு நிறைய திட்டங்களை கொடுத்துள்ளது. பின்னலாடை தொழில் அதிகம் நடைபெறும் திருப்பூரிலும் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களை தந்துள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் பல அமளிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் திட்டங்களை நிறைய கொண்டு வருவேன். தற்போது புதியதாக இணை அமைச்சர்களாக பொறுப்பேற்ற 43 பேரும் மக்களிடத்தில் ஆசி பெற யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். 75 ஆண்டுகால வரலாற்றில் அனைத்து சமூக மக்களையும் இணை அமைச்சராக்கியது தான் சமூக நீதி. அப்படியானால் பிரதமர் மோடி தான் சமூகநீதி காவலன். இவ்வாறு எல்.முருகன் பேசினார். நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திமுகவை ஆதரிப்போம்

முன்னதாக கோவை வந்த எல்.முருகன், நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த  ஜூலை மாதத்தில் பதவியேற்ற பிறகு இந்த யாத்திரை மூலமாக மக்களை  சந்திக்கிறேன். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய  மாவட்டங்களில் அடுத்த 3 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கொரோனா  குறைந்துள்ளதால் யாத்திரை நடத்துகிறோம்.

திமுக நல்லது செய்தால்  ஆதரிப்போம். பெட்ரோல் விலை குறைப்பு என்பதை திமுக தேர்தல் வாக்குறுதியாக  கொடுத்தது. அதனை தற்போது நிறைவேற்றியுள்ளார்கள். மத்தியஅரசு கச்சா எண்ணெய்  விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும். அனைத்து சாதியினரும்  அர்ச்சகர் ஆவது புதிதல்ல. ஏற்கனவே பல கோயில்களில் மாற்று சமுதாயத்தை  சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர்  கூறினார்.

Related Stories: