பதிப்புரிமை வழக்கில் ஆஜராகாத கங்கனாவின் சகோதரி சட்டத்திற்கும் மேலானவரா?: மும்பை போலீசில் எழுத்தாளர் புகார்

மும்பை: பதிப்புரிமை வழக்கில் ஆஜராகாத நடிகை கங்கனாவின் சகோதரி ரங்கோலி, சட்டத்திற்கும் மேலானவரா? என்று எழுத்தாளர் ஆஷிஷ் கவுல் கேள்வி எழுப்பி உள்ளார். பிரபல எழுத்தாளர்  ஆஷிஷ் கவுல், தான் எழுதிய இந்தி பதிப்பு புத்தகத்தை  வெளியிடுவதற்கு முன்பாக அதன் பிரதி ஒன்றை நடிகை கங்கனாவுக்கு  அனுப்பிவைத்தார். ஆனால், இந்த புத்தகத்தில் வரும் கதையின் அடிப்படையில்,  தான் புதிய படம் எடுக்கவுள்ளதாக கங்கனா அறிவித்தார். இதுதொடர்பாக எழுத்தாளர் ஆஷிஷ்  கவுலிடம், அவர் எவ்வித முன்னுரிமையும் பெறவில்லை எனக்கூறப்படுகிறது.  அதிர்ச்சியடைந்த ஆஷிஷ் கவுல், கங்கனாவுக்கு எதிராக பதிப்புரிமை வழக்கு தொடுத்தார்.

அதில், கங்கனாவின் சகோதரியும், மேலாளருமான ரங்கோலி சாண்டலின் பெயரும் இருந்தது. இந்த வழக்கின் அடிப்படையில் ரங்கோலியை போலீசார் இன்னும் விசாரிக்கவில்லை. அவரும், போலீசார் முன் ஆஜராவில்லை. அதையடுத்து, தனது வழக்கறிஞர் மூலம் மீண்டும் மற்றொரு புகாரை கார் காவல் நிலையத்திற்கு ஆஷிஷ் கவுல் அனுப்பி உள்ளார். இந்த புகாரை பெற்ற காவல்துறையினர், இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து ஆஷிஷ் கவுல் கூறுகையில், ‘பதிப்புரிமை புகார் கொடுத்து சுமார் 5 மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

ஆனால் ரங்கோலி சாண்டல் இன்னும் விசாரிக்கப்படவில்லை. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை கைது செய்ய வேண்டும். நீதிமன்றம் மூலம் ரங்கோலிக்கு விலக்கு கிடைக்காத நிலையில், ​​அவர் மீது ஏன் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை? அவர், சட்டத்திற்கும் மேலானவரா?  சாதாரண மனிதனுக்குத்தான் சட்டம் உள்ளது. பிரபலமாகவும், வசதியாகவும் இருப்பவர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப செயல்பட சட்டம் அனுமதிக்கிறது’ என்று கோபத்துடன் கூறினார்.

Related Stories: