7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் குடியரசு தலைவரின் முடிவுக்காக காத்திருக்கிறோம் : தமிழக அரசு

மதுரை :  7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் குடியரசு தலைவரின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 29 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.இவர் அண்மையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகள் சிறையில் இருக்கிறேன். 14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என சிறையில் இருந்தவர்கள் எல்லாம் பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், நான் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. 29 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். உடல்நலம் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. இது குறித்து விரைவில் முடிவெடுக்க கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 1600 ஆயுள் தண்டனை கைதிகளின் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான மனு பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், எங்களது மனு காத்திருப்பில் இருக்கிறது. ஆகவே 29 ஆண்டுகள் சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் மேற்கண்ட மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷா பானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே போல ரவிச்சந்திரன் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் 7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் குடியரசு தலைவரின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது. குடியரசு தலைவரின் முடிவு மனுதாரரின் கோரிக்கைக்கு எதிராக அமைந்தது என்றால் அப்போது மனுதாரர் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தை நாடலாம். இவ்வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கிறோம்  என்று, தெரிவித்தனர்.  

Related Stories: