ஒன்றிய அரசின் மீன்வள மசோதாவை எதிர்ப்போம்: பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்கின்ற அரசாக திமுக அரசு இருக்கும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த நிதி நிலை, வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் பேசுகையில், ‘‘ஒன்றிய அரசு மீன்வளத் துறை மசோதா கொண்டுவர முயற்சிக்கிறது. அதை கொண்டுவர சம்மதிக்க கூடாது. அந்த மசோதா தேவையில்லை என்று மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். சட்டத்தை தடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிஷ்ணன் பேசியதாவது:  ஒன்றிய அரசு ஒரு வரைவு திட்டத்தை அறிவித்தது. அது பல்வேறு வகையில் தமிழக மீனவர்களுடைய நலனை பாதிக்கக்கூடிய வகையில் பல்வேறு சட்டங்கள் அதில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால், தமிழக முதல்வர் உடனடியாக பிரதமருக்கு இந்த சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது.  இதில் பல்வேறு திருத்தங்கள் வேண்டும் என்ற வகையில் வலியுறுத்தியது மட்டுமல்லாமல், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சட்டத்தில் உள்ள அனைத்து சட்டங்களையும் எடுத்து சொல்லி, இந்த சட்டத்தின் மூலம் பாரம்பரிய மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அவர்களை குற்றவாளிகளாக மாற்றக்கூடிய வகையிலே இந்த சட்டம் அமைந்துள்ளது. ஆகவே, பல பேரிடம் கலந்து பேசி, முடிவு செய்து அதற்கு பின்பு தான் அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வகையில் அறிவுறுத்தினார். அதன் மூலம் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை. எந்த காலத்திலும் பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்கின்ற அரசாக மு.க.ஸ்டாலின் அரசு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: