நெல்லை - தென்காசி மார்க்கத்தில் நான்கு வழிச்சாலைக்காக இடிக்கப்படும் கல் மண்டபங்கள்: வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி

நெல்லை:   நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலைக்காக வரலாற்று சிறப்புமிக்க கல் மண்டபங்கள் இடிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இடிக்கப்பட்ட கல் மண்டபங்களில் காணப்படும் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.நெல்லை - ெதன்காசி சாலையானது தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ரூ.430.71 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இச்சாலை பணிகள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறுகின்றன.

இதில் தற்போது நெல்லை அருகே பழைய பேட்டையில் இருந்து ஆலங்குளம் வரைக்குமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பழைய பேட்டை முதல் ஆலங்குளம் வரை 7.62 சதவீத பணிகளும், ஆலங்குளம் முதல் ஆசாத் நகர் வரை 1.8 சதவீத பணிகளும் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டன. கிராமப் பகுதிகளில் 35 மீட்டர் அகலத்திலும், நகரப் பகுதிகளில் 25 முதல் 28 மீட்டர் அகலத்திலும் இச்சாலை அமைக்கப்படுகிறது. இச்சாலையில் பழமை வாய்ந்த மரங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டபோது பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. வெட்டப்பட்ட ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் வீதம் சாலையில் நட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் நெல்லை - தென்காசி சாலையில் பல்ேவறு இடங்களில் வரலாற்று சின்னங்களான கல் மண்டபங்களை இடித்து அகற்றி வருவதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இத்தகைய கல் மண்டபங்களில் வரலாற்று ஆவணங்களை கூறும் வகையில் சில குறியீடுகளும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. சாலை பணிகளுக்காக இவற்றை இடித்து அகற்றுவோர், அவற்றை வெறும் கற்களாக கருதி லாரிகளில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். இதனால் வரலாற்று ஆய்வாளர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து நெல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் செல்லப்பா கூறுகையில், ‘‘நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிச்சநல்லூர், கொற்கை, கயத்தாறு, மறுகால்தலை என தொன்ம சரித்திரம் பேசும் எத்தனையோ பகுதிகள் உள்ளன.

இம்மாவட்டங்களில் காணப்படும் கல்மண்டபங்களும், சத்திரங்களும் வரலாற்று ஆவணமாக உள்ளன. வாகன போக்குவரத்து அற்ற அக்காலக்கட்டத்தில் பாதயாத்திரை செல்வோர் பசியாறவும், இளைப்பாறவும் சத்திரங்களும், கல் மண்டபங்களுமே தற்காலிக புகலிடமாக இருந்தன. அதிலும் நெல்லை - தென்காசி சாலையில் காணப்படும் கல் மண்டபங்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னர்கள் காலத்திலும், பிற்கால பாண்டிய மன்னர்கள் காலத்திலும் கட்டப்பட்டவையாகும். தென்காசி, குற்றாலம் மற்றும் கேரள பகுதிகளில் இருந்து திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு பாதயாத்திரை செல்வோர் இத்தகைய கல் மண்டபங்களில் தங்கி இளைப்பாறி செல்வர்.

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இம்மண்டபங்களை இடிப்பதால், வரலாற்று சின்னங்கள் சிதைவுறும். இடிக்கப்பட்ட மண்டபங்களில் உள்ள கற்களையும், கல் தூண்களை அரசு அருங்காட்சியகம் மற்றும் தொல்பொருள் துறையின் கீழ் பாதுகாத்திட முன்வரவேண்டும்.’’ என்றார்.நெல்லை - தென்காசி சாலையில் தற்போது கரும்புலியூர், சீதபற்பநல்லூர், புதூர் ஆகிய பகுதிகளில் கல் மண்டபங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மண்டபங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் மற்றும் கல் தூண்களையும் பாதுகாத்திட நடவடிக்கை இல்லை. எனவே அதற்கான முயற்சிகளை நெல்லை, தென்காசி மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும்.

Related Stories: