காபூல் சர்வதேச விமான நிலையத்தில் குவியும் வெளிநாட்டவர்: விமான நிலையத்தை தாலிபான் நெருங்க கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை

காபூல்: காபூலில் தாலிபான்களின் கைகளில் இன்னும் விழாத ஒரே முக்கிய இடமான சர்வதேச விமான நிலையத்தில் எங்கும் மனிதர்களின் அபய குரல்களே கேட்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினாலும் கூட சர்வதேச விமான நிலையத்தை நெருங்க கூடாது என்று தாலிபான்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அத்துடன் ஆப்கானில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்காக கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதேபோல் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நேட்டோ நாடுகளும் தத்தமது குடிமக்களை அழைத்து வர போர் விமானங்களை அனுப்பியுள்ளன.

காபூலில் வசித்த வெளிநாட்டவர் ஒவ்வொருத்தரும் தங்களை பத்திரமாக தாயகம் அழைத்து செல்ல விமானங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரில் அரசு படைகளுக்கு உதவியதன் காரணமாக தாலிபான்களால் கொல்லப்படலாம் என்று அஞ்சி நடுங்கும் உள்ளூர்மக்களும், அரசு உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. விமான நிலையத்தில் காத்திருக்கும் ஆப்கானியர்கள் தங்களை அழைத்து செல்லும் விமானங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஆப்கானை விட்டு வெளியேறுவதற்கான மற்ற அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டதால் வாழ்வா, சாவா நெருக்கடிக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒருவேளை நேட்டோ நாடுகள் விமானம் அனுப்பி உதவாத பட்சத்தில் வீடு திரும்ப முயன்றால் தாலிபான் சோதனை சாவடியை கடந்தே தீர வேண்டும் என்பதால் மரணம் நிச்சயம் என்று அவர்கள் பரிதவிக்கின்றனர். உள்நாட்டு போரில் தாலிபான்களை தோற்கடிக்க தாங்கள் உதவியதை நேட்டோ நாடுகள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் கண்ணீருடன் முறையிடுகின்றனர்.

Related Stories: