திரிபுராவில் கொடி ஏற்ற சென்றபோது திரிணாமுல் எம்பி மீது பாஜவினர் தாக்குதல்

அகர்தலா: திரிபுராவில் சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றுவதற்காக சென்ற திரிணாமுல் எம்பி டோலா சென்னின் கார் மீது பாஜ தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிபுராவில் 2023ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரசும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால், இம்மாநிலத்தில் கட்சியை பலப்படுத்துவதற்காக திரிணாமுல் தலைவர்கள் அங்கு சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இதனால், இம்மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜ.வுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றுவதற்காக திரிபுரா சென்றார். பெலோனியா நகர் அருகே அவர் காரில் சென்றபோது பாஜ ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளார். இதில், தனது கார் சேதமடைந்ததோடு, தன்னுடன் வந்தவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Related Stories: