5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தது: ஓராண்டில் குடமுழுக்கு நடத்த திட்டம்; அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: 5 சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள்- பேயாழ்வார் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோயில் பிரகாரங்கள் மற்றும் அங்குள்ள தேர்களை ஆய்வு செய்தார். அப்போது, அர்ச்சகர்கள், கோயில் குடமுழுக்கு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அளித்தனர். இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். ஆனால், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கடந்த 17 ஆண்டுகளாகியும் குடமுழுக்கு நடைபெறவில்லை. இதற்கு முன்பு இருந்த கோயில் நிர்வாகிகள் குடமுழுக்கு உள்ளிட்ட எந்தவித பணியும் மேற்கொள்ளவில்லை.

இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரியிடம் கலந்தாலோசித்து கோயிலை சீரமைத்து ஆகம விதிகளின்படி குடமுழுக்கிற்கு எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். ஓராண்டுக்குள் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும். இங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள் வைத்த கோரிக்கைகள் குறித்து உரிய முறையில் பரிசீலிக்கப்படும். தற்போது இக்கோயில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோயில் நிலம், நகை, ஆபரணங்கள் உள்ளிட்ட கோயில் சொத்துகளை உதவி ஆணையர் ஆய்வு செய்வார். ஓரிரு நாட்களில் இக்கோயில் இந்து சமய அறநிலைத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்’ என்றார். இந்த ஆய்வு பணியின்போது ஆணையர் குமரகுருபரன், மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலு, இணை ஆணையர் ரேணுகா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: