கோயில்களில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி: கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற உத்தரவு

சென்னை: கடந்த 3 நாட்களுக்கு பிறகு கோயில்களில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வழிகாட்டி நெறிமுறையை பின்பற்றி, தேவையான ஏற்பாடுகளை செய்ய இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 13ம் தேதி முதல் 3 நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

குறிப்பாக, அனைத்து கோயில்களின் நுழைவாயிலில் பொதுமக்கள் செல்ல முடியாத வண்ணம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால் கோயிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒரு சில இடங்களில் கோயிலுக்கு வரும் பாதையில் தடுப்பு ஏற்படுத்தி பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மசூதிகளிலும் தொழுகையில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. நேற்று ஆடி ஞாயிறு கொண்டாட்டம் என்பதால், அம்மன் கோயிலுக்கு வெளியே பொங்கல் வைத்து படையிலிட்டு தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினார்கள். மாநிலம் முழுவதும் பெரும்பாலான சர்ச்சுகளில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு சர்ச்சுகள் சார்பில் தனித்தனியாக இணையதளம் வழியாக வழிபாடு நடந்தது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில், இன்று முதல் மீண்டும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றியும், போதுமான ஏற்பாடுகளை செய்தும் கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய தேதிகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: