அங்கீகாரம் இல்லாத மனையை வரன்முறைப்படுத்தி பத்திரப்பதிவு பதிவுத்துறை-டிடிசிபி-சிஎம்டிஏ ஒருங்கிணைந்து செயல்பட புதுதிட்டம்: பதிவுத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: அங்கீகாரம் இல்லாத மனையை வரன்முறைப்படுத்தி பத்திரப்பதிவு செய்யும் வகையில், பதிவுத்துறை-டிடிசிபி-சிஎம்டிஏ ஒருங்கிணைந்து செயல்பட புதுதிட்டம் ஒன்றை செயல்படுத்தப்படவிருக்கிறது என்று பதிவுத்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்ய கடந்த 2017ல் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை தொடர்ந்து கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்பு அங்கீகாரம் இல்லாத மனையை வரன்முறை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த 2018 மே 6ம் தேதி அங்கீகாரம் இல்லாத மனையை வரன்முறைப்படுத்த கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், அங்கீகாரம் இல்லாத மனையை வரன்முறை செய்ய பிரத்யேகமாக தனியாக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்பேரில், 5 லட்சம் மனைகள் மட்டுமே வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 11 லட்சம் மனைகள் வரன்முறைப்படுத்தப்படாமல் உள்ளன. இந்த நிலையில், அரசின் தடையை மீறி அங்கீகாரம் இல்லாத மனையை பதிவு செய்வதாக பதிவுத்துறை ஐஜி சிவன் அருளுக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் கடந்த மாதம் மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத மனை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக மாவட்ட தணிக்கை பதிவாளர்கள் தணிக்கை செய்தனர்.

அப்போது பல அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாத மனையை பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்ைக விடுத்துள்ளார். இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத மனையை வரன்முறைபடுத்தும் திட்டத்தில் பதிவுத்துறை-டிடிசிபி-சிஎம்டிஏ இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பத்திரப்பதிவுத்துறையின் மூலம் அங்கீகாரம் இல்லாத மனைகள் தொடர்பாக இணையவழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரன்முறைப்படுத்தப்பட்ட, பிறகு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.

இதற்காக, விரைவில் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் சார்பில் டிடிசிபி, சிஎம்டிஏ அதிகாரிகள் உடன் விரைவில் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையின் பேரில் எடுக்கப்படும் முடிவுகளை வைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது, பத்திரப்பதிவுக்காக முத்திரை தீர்வை 7 சதவீதம், பதிவு கட்டணம் 4 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அங்கீகாரம் இல்லாத மனைக்கு வரன்முறை கட்டணம் 2 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படவிருக்கிறது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: