பொள்ளாச்சி அருகே பிஏபி பிரதான கால்வாயில் சீரமைப்பு பணி தீவிரம்

பொள்ளாச்சி :  திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து கடந்த 3ம் தேதி, 4ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பிரதான கால்வாய் வழியாக பொள்ளாச்சி அருகே கெடிமேடு பகுதியை கடந்து பல்லடம், வெள்ளக்கோவில் வரை செல்கிறது. இதன்மூலம், பல ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.

 இதில், பொள்ளாச்சி அருகே கெடுமேடு பகுதி வழியாக செல்லும் பிஏபி பிரதான கால்வாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணானது. இதையறிந்த விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு  வந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக, திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கால்வாயில் தண்ணீர் குறைந்த பிறகு, உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்யும் பணி நடைபெற்றது. தற்போது, அப்பணி நிறைவடைந்த நிலையில், இன்று (14ம் தேதி) மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: