தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்

* ரூ.165 கோடியில் நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம்  

* விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்

சென்னை: சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த 2021-22ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

* தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 எனும் நவீன தரத்திற்கு உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இளைஞர்களுக்கு வழங்கப்படும். இதனால், மேலும், சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நெய்வேலியில் அமைக்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தொழிற்சாலைகளில் திறம்பட வேலை செய்வதை உறுதி செய்வதற்காக,  எதிர்கால வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சியினை, தெரிவு செய்யப்பட்ட 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்க 60 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கான மானியமாக ரூ.200 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டின் உள்ள தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டின் தொழிலகப் பயன்பாட்டிற்கான நில எடுப்புச் சட்டம் மேலும் எளிமைப்படுத்தப்பட்டு, நிலத் தொகுப்புக்கள் மற்றும் தனியாருடனான பேச்சுவார்த்தை மூலம் நில எடுப்பு ஊக்குவிக்கப்படும். தொழில்சார் நோக்கத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விரைவாகவும், உரியவாறாகவும் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.4,500 கோடி முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,000 கோடி செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தின் மாநல்லூரில் ஒரு மின்-வாகனப் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம், ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும். தொழில்துறை அலகுகளுக்காக தூத்துக்குடியில் 60 எம்எல்டி அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஓசூரில் உள்ள தொழிலகங்களுக்கான 10 எம்எல்டி டிடிஆர்ஓ கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.

* நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளன. அதனை முன்னெடுக்கும் வகையில் ‘நிதிநுட்ப கொள்கை’ ஒன்று வெளியிடப்படும். மேலும், வழிகாட்டி நிறுவனத்தில் இதற்கென பிரத்யேகமான ‘நிதிநுட்ப பிரிவு’ ஒன்று அமைக்கப்பட்டு, நிதிநுட்ப நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். சென்னையில் இரண்டு கட்டங்களாக நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும். முதற்கட்டமாக நந்தம்பாக்கத்தில் இந்த நிதிநுட்ப நகரம் ரூ.165 கோடியில் உருவாக்கப்படும்.

* பழைய மாமல்லபுரம் சாலை தகவல் தொழில்நுட்ப துறை பெருவழியாக வளர்ச்சியடையவதற்கு, 2000ம் ஆண்டில் சென்னையில் முத்தமிழறிஞர் கலைஞரால் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது முக்கிய காரணமாகும். இப்போது தமிழ்நாட்டிலுள்ள நிலை II மற்றும் நிலை III நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

* ஓசூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் பாதுகாப்பு தொழில்துறை பெருவழிகளை நிறுவுவதாக ஒன்றிய அரசு அறிவித்த போதிலும், அதற்கான ஒன்றிய அரசின் உதவி குறைவாகவே உள்ளது.  கோவையில், 500 ஏக்கர் பரப்பளவில், ரூ.225 கோடி மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், ரூ.3500 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். இப்பூங்காக்களில், தயார்நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் உட்பட உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்கென இப்பூங்காக்களில், முதற்கட்டமாக, ரூ.1,500 கோடியில், 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்படும்.

* வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. எனவே, மாநில அளவிலான கடன் உத்தரவாதத் திட்டத்தை மேலும் பல இம்மாதிரியான நிறுவனங்கள், குறிப்பாக குறு தொழில் நிறுவனங்கள் கடன் பெறும் வகையில் செயல்படுத்தும்.  இந்நிறுவனங்கள் வணிகத் திறனின் அடிப்படையில் நிதி நிறுவனங்களும் நவீன நிதி தொழில்நுட்ப நிறுவனங்களும் கடன் வழங்கிட ஏதுவாக, மின்னணு தகவல் தரவுகள் அடிப்படையிலான கடன் மதிப்பீட்டு முறை ஏற்படுத்தப்படும். இந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடன் பெற ஏதுவாக, பதிவு செய்வதற்கான, ஆவணங்களை நேரில் வராமல் இணைய வாயிலாகவே பதிவு செய்ய உரிய சட்டத்திருத்தங்கள் பதிவுச் சட்டத்தில் கொண்டு வரப்படும். பங்குச் சந்தைகள் மூலம் முதலீட்டைப் பெற முயலும் இந்நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்து, ரூ.30 லட்சம் வரை பட்டியலிடும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்.

* ஐந்து பெரிய தொழிற் தொகுப்புகளை மருந்து மற்றும் பெட்ரோ இரசாயனங்கள் துறையிலும், துல்லியமான உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து ஆகிய துறைகளிலும் ரூ.100 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளன. கூடுதலாக, புகைப்படம் எடுத்தல், அட்டைப் பெட்டி அச்சிடுதல், உணவுப் பொருட்கள், கயிறு தயாரித்தல் மற்றும் அச்சிடும் துறைகளுக்கு, செங்கல்பட்டு, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.55 கோடி செலவில் மேலும் 5 பொது வசதி மையங்கள் நிறுவப்படும்.

* 265 ஏக்கர் மொத்தப் பரப்பளவில் 5 இடங்களில் நில வங்கிகளை சிட்கோ நிறுவ உள்ளது. சிட்கோ தொழில்துறை பூங்காக்களில், விற்கப்படாத மனைகளை விரைவாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்காக விலைக் கொள்கை சீரமைக்கப்படும். 62 தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள 9,264 மனைகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கான மலிவான வாடகையில் குடியிருப்பு வளாகங்கள் முதலில் சென்னை மற்றும் கோவையிலும் பின்னர் ஏனைய இடங்களிலும் தொடங்கப்படும்.

Related Stories: