இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தடை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வெறிச்சோடியது

திருச்செந்தூர்: இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகத்தில் கொரோ னா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர கடந்த 8ம் தேதி ஆடி அமாவாசை, 11ம் தேதி ஆடிப்பூரம் ஆகிய விழாக்களையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பேரில் 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பக்தர்கள் கோயிலின் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அதே நேரத்தில் அர்ச்சர்கள் மூலம் வழக்கமான பூஜைகள் நடந்தன.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அடுத்த இரு வாரங்களுக்கு கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்களுக்கு தரிசனத்துக்கு தடை செய்யப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது தொடர்பாக அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று ஆடி வெள்ளிக் கிழமை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் அம்மன் கோயிலுக்கு வருவார்கள்.

இதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே இன்று சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு அபிசேகம், 6.30 மணிக்கு தீபாராதனை மற்றும் மற்ற காலபூஜைகள் வழக்கம் போல் நடந்தன. சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் நாழிக்கிணறு டோல்கேட் அருகே கோயிலுக்குள் பக்தர்கள் நுழைய முடியாதவாறு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டம் அறவே இல்லாததால் கோயில் வளாகமும், கடற்கரை பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் மசூதிகளிலும் இன்று தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்ச்சுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் ஜெபம் செய்ய அனுமதியில்லை. எனவே அந்தந்த சர்ச் நிர்வாகங்கள் சார்பில் இணையதளம் வழியாக பிரார்த்தனைகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அடுத்த வாரம் 20,21,22 ஆகிய தேதிகளிலும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Related Stories: