மசினகுடி அருகே ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி யானை பலி

ஊட்டி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வெளி மண்டலம், வடகிழக்கு சரிவு வனச்சரகத்திற்குட்பட்ட மங்களப்பட்டி, கலக்கல் மொக்கை அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது. யானையின் ஆசன வாய் மற்றும் தும்பிக்கை, வாயிலிருந்து ரத்தம் வெளியேறி இருந்ததால் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இறந்தது தெரியவந்தது. இந்த நோய், நோயுற்ற விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நேற்று யானையின் உடல் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வன ஊழியர்கள் யானையின் உடல் அருகே அனுமதிக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள், முதுமலை வன கால்நடை மருத்துவர் அடங்கிய குழுவினர் பிபிஈ கிட் அணிந்து யானை உடலில் இருந்து ஆய்விற்காக மாதிரி சேகரித்தனர். பின்னர், அதன் உடலில் பார்மலின் ரசாயன மருந்து தெளிக்கப்பட்டது. தொடர்ந்து யானையின் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்பகுதியில் 50 மீட்டர் சுற்றளவில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பிற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

 இதைத்தொடர்ந்து, மசினகுடி சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து மசினகுடி துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘‘வாய் மற்றும் தும்பிக்கையில் ரத்தம் வெளியேறிய நிலையில் 4 வயதான ஆண் யானை இறந்து கிடந்தது. ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் பிபிஈ கிட் பாதுகாப்பு உபகரணம் அணிந்த மருத்துவ குழுவினர் யானையின் உடலில் இருந்து மாதிரி சேகரித்தனர்.

ஆய்விற்கு பின் காய்ந்த மரக்கட்டைகள் கொண்டு யானையின் உடல் தீயிட்டு முழுமையாக எரிக்கப்பட்டது. இப்பகுதியில் வேறு வனவிலங்குகளுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

வேட்டை விலங்கு தாக்கி குட்டி யானை சாவு

முதுமலை புலிகள் காப்பகம் உள் மண்டலம், தெப்பகாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட சர்க்கிள் ரோடு வனத்தில் ஊழியர்கள் ரோந்து பணியில் இருந்தபோது பெண் யானை குட்டி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சுற்றி யானை கூட்டம் நின்றிருந்தது. இதனால், வன ஊழியர்கள் அருகில் செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் யானை கூட்டம் அங்கிருந்து சென்ற பின் அருகில் சென்று இறந்த யானை குட்டியை பார்த்தனர். அது பிறந்து ஒரு மாதமே ஆன பெண் யானை குட்டி என தரியவந்தது.

இதையடுத்து, ஓவேலி கால்நடை மருத்துவர் பாரத்ஜோதி வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. யானை குட்டியின் உடலில் வேட்டை விலங்குகள் கடித்த தழும்புகள் இருந்தன. வலது பக்க பின்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், வயிறு உள்ளிட்ட உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. வேட்டை விலங்கிடம் இருந்து தப்பிய யானை குட்டி, சரியான தீவனம் இன்றியும், காயத்தின் தீவிரம் காரணமாகவும் இறந்தது தெரியவந்தது.

Related Stories: