கொள்ளிடம் அருகே அகரவட்டாரம் ஊராட்சி குளத்தில் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட படித்துறை கட்டப்படுமா?: கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே அகர வட்டாரம் ஊராட்சியில் பொது குளத்தில் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட படித்துறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அகர வட்டாரம் ஊராட்சியில் குருவியான்பள்ளம் கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சிக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. இந்தக் குளம் பல வருடங்களாக தூர்வாரப்படாத நிலையில் கடந்த வருடம் அதிக ஆழமான அளவுக்கு தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கிராம பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2019ம் ஆண்டு ரூ2.5 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை கட்டப் போவதாக அறிவித்து மணல், சிமெண்ட், ஜல்லி மற்றும் கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொண்டு வந்து இறக்கினர். சில தினங்கள் கழித்து அனைத்து கட்டுமான பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. படித்துறை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போது குளம் வற்றி கிடக்கும் சூழ்நிலையில் இந்த சாவடி குளத்துக்கு தண்ணீர் வருவதற்குள் பொதுமக்கள் நலன் கருதி படித்துறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: