கடந்த ஆட்சியில் இருந்ததைபோல சாலை ஒப்பந்ததாரர்கள் ஏகபோகமாக செயல்பட முடியாது: அமைச்சர் எ.வ.வேலு திட்டவட்டம்

திருச்சி: திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கான பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக் கூட்டம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வைத்தார். பொதுப்பணித்துறை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் 6 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: பொதுப்பணித்துறை சார்பில் 303 பணிகள் ரூ.496.82 கோடியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். நெடுஞ்சாலைத்துறையை பொறுத்தவரை 2 வழி சாலைகளை 4 வழியாகவும், 4 வழி சாலைகளை 6 வழியாகவும் மாற்றி வருகிறோம். தமிழகத்தில் 245 தரைமட்டப்பாலங்கள் கண்டறியப்பட்டு, அங்கு மேம்பாலம் அமைக்கப்படும்.கடந்த ஆட்சியில் ஒப்பந்த நிறுவனங்கள் மோனாபொலியாக (ஏகபோகம்) சாலை ஒப்பந்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இனி ஒப்பந்த நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்பட முடியாது. இந்த ஆட்சியை பொறுத்தவரை சாலை பணிக்கான ஒப்பந்தங்கள் பரவலாக பகிர்ந்தளிக்கப்பட்டு பணிகள் நடைபெறும். சர்க்கிள் அளவில் ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசி இனி டெண்டர் விடப்படும் என்றார்.

Related Stories: