எம்எல்ஏ பதவியை மட்டும் வைத்திருந்த எடியூரப்பாவுக்கு அமைச்சருக்கு இணையான சலுகை..! விசுவாசத்தை வெளிப்படுத்திய பசவராஜ்

பெங்களூரு: எம்எல்ஏ பதவியை மட்டும் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு, அமைச்சருக்கு இணையான சலுகைகளை வாரி வழங்கியுள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்பை. இதற்கான அதிகாரபூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார். கர்நாடகாவில் பாஜக முதல்வராக இருந்த எடியூரப்பா, ஜூலை 26ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது நெருங்கிய ஆதரவாளராக பசவராஜ் பொம்மை முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில், முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்திருந்தாலும், அவருக்கு அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படும் என்று பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு, அமைச்சர்களுக்கு நிகரான சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும். இந்த சலுகைகள் முதல்வர் பதவியில் பசவராஜ் பொம்மை இருக்கும் வரையில் தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் கூட, தனது எம்எல்ஏ பதவியைத் தவிர வேறு எந்தப் பதவியையும் வகிக்க முடியாது. அவருக்கான சம்பளத்துடன் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து, போக்குவரத்து, விடுதி உள்ளிட்ட ஆதாயங்களை அவர் பெறமுடியும். தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக முதல்வர் பசவராஜ், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சலுகைகளை வழங்கி உள்ளார்’என்று அந்த தகவல்கள் தெரிவித்தன.

Related Stories: