3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினா கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சென்னை: கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை ெமரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் கலைஞரின் படத்துக்கு  மலரஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 8:10 மணியளவில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலைஞரின் நினைவிடத்திற்கு வந்தார். சரியாக 8.13 மணியளவில் அவர் கலைஞர் நினைவிடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வெள்ளக்கோயில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன்,  பி.கே.சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி, சீ.வி.மெய்யநாதன், எம்.பிக்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, கனிமொழி, ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், மயிலை வேலு, எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், பிரபாகர் ராஜா மற்றும்  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவரின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் சிஐடி காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார். மேலும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் படத்திற்கும் மரியாதை செலுத்தினார். பின்னர், கலைஞரின் விருப்பமான இடங்களில் ஒன்றான முரசொலி அலுவலகத்தில்  உள்ள சிலைக்கு மரியாதைசெலுத்தினார். இந்தநிகழ்ச்சியில் கட்சியின் மூத்த  நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகம் சென்றார். அங்கு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்து வணங்கினார்.

அப்போது துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் கழக குமார், செங்குட்டுவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தமிழக காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் கலைஞர் நினைவிடத்தில் தமிழ்நாடு மாற்றுத்  திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பாக அதன் மாநிலத் தலைவர் ரெ.தங்கம்  தலைமையில் 50க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாற்று திறனாளிகள் மரியாதை செலுத்தியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.அதே போல் கலைஞர் நினைவிடத்தில் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்பி, மு.க. தமிழரசு, செல்வி, தூர்கா ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர். கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா கால நெறிமுறைகளை கருத்தில் கொண்டு அவற்றை முறையாக கடைபிடித்து அவரவர் இல்லத்தின் வாசலில் கலைஞரின் படத்தினை வைத்து, மாலையிட்டு மலர்தூவி, புகழ் வணக்கம் செலுத்த வேண்டும். பெரும் விழாக்கள் வேண்டாம். அலங்காரம், ஒலிபெருக்கிகளை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு எளிய முறையில், கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து கலைஞரின் நினைவு தினத்தை அனுசரித்தனர். மேலும், தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் வழங்கினர். அது மட்டுமல்லாமல் மருத்துவமனைக்கு உதவிகள், வேலைவாய்ப்பு முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். தமிழகம் மட்டுமல்லாது பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் துபாய் போன்ற நாடுகளிலும் கலைஞரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சபாநாயகர் அப்பாவு மரியாதை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் சபாநாயகர் அப்பாவு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கும், திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் உள்ள கலைஞரின் படத்துக்கும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உறுதி மொழி வாசகம்

கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைஞரின் புகைப்படம் முன்பு ஒரு ஏடு வைக்கப்பட்டிருந்தது. அந்த ஏட்டில் ‘‘தமிழ்சமுதாய வளர்ச்சிக்காக இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும், லட்சியங்களையும் வென்று காட்டுவோம்’’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற உறுதிமொழி வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது. மேலும் நினைவிடத்தில் முத்தமிழ் பேரவை மற்றும் தலைமை இசை வேளாளர் சங்கம் சார்பில் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: